2020 லண்டனில் உள்ள எப்சம் பொது மருத்துவமனை சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. முகக் கவசம், கையுறைகள் சகிதம் சீருடைச் செவிலியர்கள் உயிர் காக்கும் தேவதைகளாய் அங்குமிங்கும் நடமாடி ஓய்வற்ற பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதையும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்த கொரோனா நச்சுயிரி தாக்கத்தினால் தினசரி ஆயிரக்கணக்கில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்படவேண்டிய அபாயக் கட்ட நோயாளிகள்... இனிப் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்படவேண்டியவர்கள்... இன்னும்..... இன்னும்.....
எல்லாவற்றையும் சரிவரக் கவனிப்பதில் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்துச் சேவைபுரிந்து கொண்டிருக்கும் தேசிய சுகாதார சேவை பணியாளர்கள்.
அன்றைய தினம் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஒரு மருத்துவர் எனவும், பெயர் சந்திரசேகரன் எனவும் தெரியவந்தபோது, மருத்துவ மனையின் சுவாச அமைப்பு ஆலோசகர் ஷகில் ரஹ்மானுடைய மனசுக்குள் ஒரு பொறி தட்டுகிறது.
‘அவராயிருக்குமோ’
சந்தேகம் தீர்ப்பதற்கு படுக்கையருகில் சென்று பார்க்கிறார்.
அவரேதான். டொக்டர். சந்திரா எனப்படும் வெங்கடாசலம் சந்திரசேகரன். பெயர் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர்.
இதோ – செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சுய நினைவின்றி...
`அன்று என்னுடைய உயிரைக் காப்பாற்றியவர் இன்று என் கண் முன்னால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்' ரஹ்மானுடைய கண்கள் கலங்குகின்றன.
இருபது வருடங்களுக்கு முன்.....
மருத்துவர் ஷகில் ரஹ்மான் நாற்பது வயதை அண்மித்துக்கொண்டிருந்த நேரம். அந்த வயதில் மாரடைப்பு வருமென எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்தது.
லண்டன், ரூட்டிங் என்னுமிடத்துள்ள செயின்ட். ஜோர்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்பொழுது அந்த மருத்துவ மனையில் இருந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக சந்திரசேகரன் பணியாற்றிக் கொண்டிருந்தார் – பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ரஹ்மானுக்கு துணைவழி இதய சத்திர சிகிச்சை [பை பாஸ்] செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அந்தத் துணை வழி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி ரஹ்மானுடைய உயிரைக் காப்பாற்றியவர் தான் இன்று கொரோனாத் தொற்றின் மோசமான நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு உணர்வின்றிப் படுக்கையிலிருக்கிறார்.
`இதோ..... பிரபலமாய் வாய்ந்த ஒரு சுவாச அமைப்பு ஆலோசகராக இன்று நான் பணிசெய்து கொண்டிருப்பது இந்த மனிதர் எனக்களித்த வாழ்க்கை. இதய நோயிலிருந்து என்னை மீட்டெடுத்த அன்பு மனிதர் இந்தப் நோய்ப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து நலம் பெற வேண்டும்'
மருத்துவர் ரஹ்மானுடைய மனசுக்குள் மௌனமாய் நிகழ்ந்துகொண்டிருந்தது இந்தப் பிரார்த்தனை.
சந்திரசேகரனின் உடல் நிலை படிப்படியாகத் தேறி வந்துகொண்டிருந்தது. பத்து நாட்கள் சிகிச்சையின் பின் அவர் மீண்டும் வீடு திரும்பும் நிலையை அடைகிறார்.
அன்று – பெருமைக்குரிய சத்திர சிகிச்சை நிபுணர் சந்திரசேகரன் மருத்துவமனையிலிருந்து விடை பெறும் நாள்.
மருத்துவ மனையில் குணமடைந்து வீடு திரும்பும் ஒவ்வொருவரும் அங்கிருந்து புறப்படும் போது – அவர்களைப் பராமரித்த செவிலியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் எல்லோரும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்துச் சொல்லி அனுப்புவார்கள்.
அன்றும் அது போல சந்திரசேகரனை வாழ்த்தி விடைகொடுக்க அனைவரும் வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுள் ஒருவராய் நின்றிருந்த மருத்துவர் ரஹ்மான் அனைவரிடமும் சொல்கிறார்.
“ஆச்சரியமூட்டும் கைராசிக்காரரான இந்த மருத்துவர் மிகவும் அன்பும் கருணையுள்ளமும் கொண்டவர். புதுமையான – மிட் கப் எனப்படும் துணை வழி அறுவை சிகிச்சைய [பை பாஸ்] ஆரம்பித்துவைத்த ஒரு சில மருத்துவர்களில் இவரும் ஒருவர். இதயம் ஒரு பக்கம் தன் வேலையைச் செய்து கொண்டே இருக்க – அதாவது இதயம் துடித்தபடியே இருக்க – இந்தத் துணை வழி அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வியப்பூட்டும் வெற்றிகளைப் பதிவு செய்த மருத்துவர் இவர்....
உடல் நிலை மோசமடைந்திருந்த இந்த நேரத்தில் அவரைப் பராமரித்து சிகிச்சையளிக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் நானும் எனது மருத்துவக் குழுவினரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.... அவர் குணமடைந்து மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்து்கொள்ளவிருக்கும் இந்த அற்புதமான நேரத்தில் எங்கள் அனைவருடையதும் மகிழ்ச்சி நிரம்பிய கைதட்டல்களை வழங்கி அன்போடு விடை கொடுக்கிறோம்”
அனைவரது முகங்களிலும் சிரிப்பு. கைதட்டல்கள் மூலம் சந்திரசேகரனை உற்சாகப்படுத்தி விடை கொடுக்கிறார்கள்.
இந்த அன்பான விடைதொடுத்தலை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட மருத்துவர் சந்திரசேகரன்,
“படிப்படியாக, எனினும் நிதானமாக ஒரு உடல் நிலை முன்னேற்றத்தை அடைந்து வருகிறேன்.... மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்து என்னை காப்பாற்றிய உங்கள் அனைவருக்கும் நானும் எனது குடும்பத்தினரும் என்றும் நன்றியுடையோம்” – என்று அன்புடன் கூறி தனது குடும்பத்தினருடன் மருத்துவமனையிலிருந்து விடைபெறுகிறார்.

கருத்துகள்
இன்னும் கருத்து இல்லை.